மோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்

ஒரு மூத்த பதிவரோட இன்னொரு முகத்தை தெரிஞ்சுகோங்க.எவ்வளவு குறுகிய மனம் படைச்சவருன்னும் அவருக்கெல்லாம் எப்படி கம்பெனில வெட்டிச் சம்பளம் கொடுக்கறாங்கன்னும்.

விவரமா சொல்றேங்க. நான்லாம் ப்ளாக்ல வெறும் போட்டோ போட்டே காலத்தை ஓட்ரவனுங்க. பதிவுல ஃபுல்ஸ்க்ரீன்ல படத்தை காட்றத பத்தி நம்ம CVR ஒரு பதிவு போட்டிருந்தார். இந்த இடத்துல ஒரு விஷயம் சொல்லனும் CVR க்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. சூதுவாது தெரியாது. தங்கமான புள்ளைங்க.போட்டோல மட்டுமல்ல வாழ்க்கையிலும் எதையும் முறைப்படி செய்யும் ஆளு. நாங்கூட சொல்லுவேன் இவ்வளவு யோக்கியன்னா நாடு தாங்காதுய்யான்னு. அவரு படத்தை பெரியதா காட்ட சொன்னவை ரொம்ப முறைப்படி இருந்துச்சு.

நாம இருக்கோமே குறுக்கு புத்தி புடிச்சவய்ங்க. அதுக்கு முன்னமே அதுல ஒரு ஷார்ட்கட் கண்டுபுடிச்சு ப்ளாக்கரில் படம் அப்லோட் பண்ண பின்னாடி படத்தின் HTML கோடில் S400 என்பதை S800 ன்னு மாத்துனா போதும்ன்னு ஃப்ளிக்கர் தெரியாத ஊர்காரங்களுக்காக வெச்சிருக்க ப்ளாக்ல ஃபுல்ஸ்கிரீன்ல மாத்துனேன். அத CVR பதிவிலயும் கமெண்டினேன்.அப்புறம் நிலா ப்ளாக்லயும் அதே போல பண்ணேன் . டக்கராவும் இருந்துச்சு.

ஆனா பாருங்க மக்களே குறுக்குவழி என்றும் நிரந்தரமில்லைன்னு கூகிள்காரன் ஆப்பு வெச்சுட்டான். ஃபுல்ஸ்க்ரீன்லதானே வரபோகுதுன்னு பல படத்தை ஒண்ணாக்கி ஒரு போஸ்ட் போட்டா S400to S800 டெக்னிக் ஒர்க்காகவே இல்லை.உருண்டு பெரண்டும் படம் பெருசாவல. சின்னபடமா பதிவுல பாத்தா அட்ராக்சனே இல்லாம இருக்கு.

நான் கைநாட்டு கேசுங்க. என்ன பண்றதுன்னு தெரியல. அப்போதான் அந்த மூத்த பதிவர் ஆன்லைன்ல இருந்தார். அவர்கிட்ட ப்ரச்சனைய சொன்னேன். அந்த காலத்துல நாங்கள்ளாம் ப்ளாக் ஆரம்பிக்கும்போது ஒண்ணுமே இருக்காது. கமெண்ட் பாக்ஸுக்கெல்லாம் என்னென்னமோ கஷ்டபட்டோம் உங்களுக்கெல்லாம் ஈசியா எல்லாமே கிடைச்சுடுச்சுன்னு அரசி ராதிகா மாதிரி தியாக செம்மலாட்டம் பேசுனுவராச்சேன்னு அவர்கிட்ட ப்ரச்சனைய சொன்னேன். ரொம்ப பந்தாவா அந்த HTMLகோடை அனுப்புங்கன்னவர் வழக்கமான பெருசுங்க மாதிரி மீடியம் லார்ஜ்ன்னு இருக்கும் லார்ஜ செலக்ட் பண்ணுங்கண்ணு நிலாபாப்பாக்கு கூட தெரியும் மெத்தேட சொன்னாரு. லார்ஜ் பத்தி எங்களுக்கேவா.
அதெல்லாம் தெரியும்னதும் கொஞ்ச நேரம் மல்லாக்க படுத்து, குப்புற படுத்து,தலைகீழா நின்னுல்லாம் பாத்திருக்கார். கடைசியில் தெரியலன்னுட்டாருங்க. சரி கூகுள்காரனுக்கு ஒரு கடுதாசி போடறேன். நான் படிக்காதவன்யா அதனால ஒரு மெயில் தமிழ்ல உங்களுக்கு பண்றேன். அத அப்படியே இங்கிலீசுல ட்ரான்ஸ்லேட் பண்ணிகொடுய்யா. கூகிள் ஓனருக்கு அத அனுப்பிடரேன்னேன்.

எங்க கூகிள் ஓனரும் நானும் சேக்காளி ஆயிருவோம்ன்னு நெனச்சுட்டாரோ இல்ல அவரும் என்ன மாதிரி கைநாட்டு கேசோ, முடியாதுனுட்டாருங்க. எனக்குன்னா கடுப்பாயிடுச்சுங்க. என்னடா ஒரு இங்கிலீசு தெரியாம இப்படி ஒரு கஷ்டமான்னு.

அப்புரம் நோண்டு நோண்டுன்னு அந்த நாலு வரி HTMl கோடை நோண்டி அதுல width: 400px; height: 300px; இதை மட்டும் தூக்கிட்டு திரும்ப நம்ம S400 க்கு பதிலா S800 டெக்னிக்க யூஸ் பண்ணி ஃபுல்ஸ்கிரீன்ல வர மாதிரி பண்ணீட்டங்க.

அதுக்கப்புறம் அவர கூப்பிட்டு அதை சொன்னேங்க

நான்லாம் படிக்காத காட்டுபயங்க, வீசிடி ப்ளேயரும் டீவியும் ஒண்ணா இருக்காமேன்ன ரேஞ்சுலதான் கம்ப்யூட்டரே வாங்குனேன், எதுக்கு ரெட்ட செலவுன்னு.ஒரு மூணு வருசம் முந்தி பிளாக்குனா என்னடான்னும். அப்புறம் மூணு மாசம் கழிச்சு என்னமோ HTML ன்னு இந்த பசங்கள்ளாம் பேசிக்கராய்ங்களே. அப்படின்னா என்னன்னும் அப்பத்தான் கேள்வியே பட்டவன்.( கொடுமை என்னன்னு அதுக்கெல்லாம் விளக்கம் சொன்னது இன்னொரு நம்ம பய அரைகுறை சஞ்சய்.) அட பரவாயில்லையே,இதெல்லாம் பண்றியேன்னு ஒரு வார்த்தை அந்த மூத்த பதிவர் சொல்லலாம்ல?

நம்ம மூத்த பதிவர்களோட ட்ரேட்மார்க்கான :) இந்த ஸ்மைலிய மட்டும் போட்டா எப்படிங்க? என்னதான் நாம பெருந்தண்மை படைச்ச ஆளுன்னாலும்(ஹி ஹி ஒரு வெளம்பரந்தேன்) இந்த மனுசப்பய மனசு எங்குட்டாலும் ஓரத்துல ஒரு சின்ன அங்கீகாரத்துக்கு ஏங்குதுண்ணே. அத கருமத்த தவிற்க முடியலண்ணே.நமக்கு பூஞ்சை மனசா வேற போச்சுண்ணே.

தாங்க முடியாம அந்த மூ.பதிவர்கிட்ட யோவ் ஒரு காட்டுபய HTML ல் எல்லாம் போய் சரி பண்றானே ஒரு வார்த்தை பாராட்ட மாட்டியான்னு கேட்டா, மக்களே அவர் சொன்னத அப்படியே இங்க காப்பி பேஸ்ட் பண்றேன்.

"varavan poravanelam computer kathukkirathalathan market ippadi naasamaa poyirchu"

இது நியாயமா?நேர்மையா? எனக்கொரு நீதி வேணும். இங்க அவரு வந்து பகிரங்கமா என்னை பாராட்டி(ஆக்சுவலி எனக்கு இதெல்லாம் பிடிக்காதுதான் இருந்தாலும் ஹிஹி) கமெண்ட் போடனும்.

இல்லைன்னா அந்த சாட் ஹிஸ்டரி, அப்புறம் ஒண்ணும்தெரியாத ஒரு அப்பாவி சின்ன பொண்ணை ஏமாத்தி கல்யானம் பண்ணியது பத்தில்லாம் எழுத வேண்டி வரும்.

இது எச்சரிக்கை.

டிஸ்கி1. பதிவுல படம் பெருசா தெரிய அப்லோட் பண்ண படத்தோட HTML கோட்ல width: 400px; height: 300px; இத தூக்கிட்டுS400ன்னு இருப்பதை S800 ன்னு மாத்தனும்.இந்த ஷார்ட்கட்டுக்கு எப்ப வேட்டு வைப்பானுங்கன்னு தெரியல. அறவழியில் ப்ராப்பரா பண்ன நினைப்பவர்கள் CVR பதிவுபடி செய்யவும்.

டிஸ்கி2. எனக்கு HTML சம்பந்தமாக தெரிந்தது இது மட்டும்தான் அதுவும் ஒரு ஃப்ளூக்கில்.

டிஸ்கி3. மேற்கண்ட இரண்டு டிஸ்கிமட்டும் தான் பதிவுக்கான மேட்டர். இவ்ளோ சின்னதா இருக்கக்கூடாதுன்னு மூத்த பதிவருக்கும் எனக்குமான ப்ரச்சனைய பொதுவுல கொண்டுவந்துட்டேன்.

டிஸ்கி4. நந்து நீங்களும் ஒரு மொக்கைபதிவர்ன்னு நெனச்சிருந்தேன், ஆனா அருமையா எழுதறீங்கன்னு போன பதிவு பாத்துட்டு இன்னொரு மூத்த பதிவர் சொல்லிட்டாருங்க. அப்பவே மனசு உடஞ்சு போச்சுங்க. அவருக்கு இந்த மொக்கை பதிவு சமர்ப்பனம்.

அண்ணே ஒரு வெளம்பரம்......

ரொம்ப ஆசையா இருந்தேங்க இந்த மாச PIT சப்ஜெக்ட் மேல. ஞானம் கிடைக்கும் நிலைக்கு போய்வந்ததால புதுசா எதையும் ட்ரை பண்ண முடியல.

சரி இந்த மாசம் விட்டுட்டா போச்சுன்னு இருக்கப்போ. திடீர்ன்னு புது படம்தான் போடறதுன்ன நம்ம பாலிசிய உடைச்சு பழைய படத்துல ரெண்டு தேத்துனா என்னன்னு ஒரு ஐடியா.

சும்மா போட்டில பங்கெடுத்துகிட்டா கூட போதும். ரெண்டு மணி நேரம் உக்காந்து பிக்காசாலயே தேத்தியாச்சு,

ரெண்டு படமுமே ஜாலிக்குன்னாலும் நல்லா யோசிச்சீங்கன்னா ரெண்டுக்குள்ளயும் இருக்கும் சீரியஸ்னஸ் புரியும் . இதுக்குத்தான் ஞானம் கிடைக்கனுங்கறது.

ரெண்டாவது படத்த இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருக்கலாம். இப்பவே ஒரு மணி நேரம் லேட்.

நாதாஸ் மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்லாம் கேப்பாரான்னு தெரியல.




========================================



படத்தை பெருசா பாக்க இங்க க்ளிக் பண்ணுங்க

சொந்த மரண தரிசனம் கிடைத்திருக்கிறதா? எனக்கு கிடைத்தது


சாவை நெருங்கிவிட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? கண்ணை மூடியதும் மரணம்தான் என நினைத்திருக்கிறீர்களா?. அதைவிட அது ஆனந்தமாகக்கூட இருக்கும் என தெரியுமா?

ஒரு வாரத்துக்கு முன்னாடி சரியான காய்ச்சல்ங்க எனக்கு. மூணு போர்வை போர்த்தி படுக்கும் அளவு குளிர்.மனைவியும் ஊரில் இல்லை. எனக்கு கால்ல முள்ளுகுத்திட்டா கூட பக்கத்துல மனைவி வேணும்( முள்ளு குத்துலைன்னாலும்தான்). அவசரமா அவள கிளம்பி வரச்சொல்லிட்டு எங்க பேமிலி டாக்டரிடம் போய் அவர பேசவே விடாம எனக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சுன்னு சொல்லி. ஃபுட்பாய்சனுக்குண்டானா இருந்த இல்லாத சிம்டம்சைல்லாம் சொல்லி மருந்துவாங்கிட்டு வந்தாச்சு.

மூணுநாள் கோர்ஸ் மாத்திரை கம்ப்ளீட் ஆகியும் காய்ச்சல் விடவே இல்லை. உடம்பு கிழிஞ்ச நாறாயிடுச்சு. திரும்ப டாக்டரிடம் போய் ப்ளட்டெஸ்ட் பண்ணதுல( ப்ளட் டெஸ்ட் எடுத்த நர்ஸ நிலா கொலைவெறியோட பாத்தது தனிகதை) ப்ளேட்லெட் கவுண்ட்ஸ் அதளபாதாளத்துக்கு போனது தெரிஞ்சது. ப்ளேட்லெட்ஸைக் குறைக்கும் வைரல்ஃபீவர்.

உடனே ஒரு இஞ்செக்சன் ட்ரிப்போட போட சொல்லி எழுதி மூணாவது ஃப்ளோர்க்கு அனுப்பிட்டார். பொதுவாவே உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பவோ, பிசினஸ்ல லாஸோ, அல்லது டிஸட்வாண்டேஜா எதாச்சும் நடக்கும் போதெல்லாமோ எனக்கு எங்கண்ணனுக்கெல்லாம் நக்கல் நையாண்டி லொள்ளு திமிரு டபுளாயிடும். பிறவியே அப்படித்தான். அதே போலதான் சசி நிலாவோட ஏகப்பட்ட நக்கலோட ட்ரிப்போட போய் கையில் ஊசில்லாம் குத்தி ட்ரிப்பும் போட்டாச்சு.

கிட்ட்டதட்ட ஒரு லார்ஜ் அளவு மருந்து ஒண்ணை சிரிஞ்சில் எடுத்து எடுத்து ட்யூப் வழியா செலுத்திட்டு போயிட்டாங்க. அத போட்ட உடனே கிர்ருன்னு தலைல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சு. அந்த வழியா போன சிஸ்டர்கிட்ட "என்னங்க இது குவார்ட்டர் அடிச்ச மாதிரி இருக்கு"ன்னு கேட்டேன் சிரிச்சுகிட்டே போயிட்டாங்க,

ஆனா அப்படியே கான்சியஸ் போக ஆரம்பிச்சுது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு வார்த்தையை உள்ள இருந்து இழுத்து வந்துதான் ரெண்டு வார்த்தையே பேச முடிஞ்சது. வாய் வேற குழறுது. ஒரு சிஸ்டரை கூப்பிட்டு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மருந்து இப்படித்தான் ரியாக்ட் பண்ணுமான்னு கேட்டேன். இத கேக்கறதுக்கே அவ்ளோ கஷ்டமாயிடுச்சு. அதுக்கு அந்த நர்ஸ்..

" எத்தனை பேர் ட்ரிப் ஏத்திகிட்டு கம்முன்னு படுத்திருக்காங்க. நீங்க மட்டும் ஏன் சார் இப்படி பண்றீங்க?"

உஸ்ஸ்ஸ் என்னால முடியல.

இன்னொருவிஷயம் அந்த இஞ்செக்சனால உடம்பும் மனசும் அவ்ளோ ஆனந்தமா இருக்கு. அப்படியே மிதப்பது போல இருக்கு.துளி கூட பயம் வரல. ஆனா மருந்து அலர்ஜி ஆயிடுசான்ன கவலையாலதான் இந்த கேள்வில்லாம்.

இதுக்கு மேல கான்சியஸ இழுத்து பிடிக்க முடியல. கண் மூட ஆரம்பிக்குது. நினைவுதப்புது. சரி மருந்து அலர்ஜியாயிடுச்சு. மேட்டர் முடியபோவுது. கடைசியா சசிகிட்ட சொல்லிடுவோம்னு இருக்கும் சக்தியெல்லாம் திரட்டி
"ச..சீ இ..ங்..க பா..ரு" ன்னு இதை மட்டும்தான் சொல்ல முடிஞ்சுது. அவ அதுக்கு

"என்ன மாமா? பாப்பா கழுத்தபுடிச்சு கிள்ளாத. எத்தன தடவ சொல்றது. அப்புறம் பாரு. ம்ம்ம் சொல்லுங்க மாமா"

உஸ்ஸ் அப்பா நீயுமா? கொஞ்ச நாளா இப்ப வாங்கி கொடுத்த ஸ்கூட்டி பெப்பில் அவளா எல்லா வேலையும் பறந்து பறந்து செய்யறதுல பூரிச்சுப்போயிருந்தேன். நாம இல்லன்னாலும் என் நம்ம பொண்ட்டாட்டி எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவான்னு.

அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.ட்ரிப் இறங்கி முடிஞ்சு பின்னாடிதான் நான் செத்ததே உனக்கு தெரியுமாட்டம் இருக்கு. இப்படி இருக்க நீ இந்த உலகத்துல இந்த குட்டி பொண்ண வெச்சுகிட்டு எப்படிடி சமாளிப்ப. எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவும் எனக்கு சக்தி இல்ல. சரி நமக்கான எல்லா வழியும் அடைபட்டிருச்சுன்னு நினைக்கும் போதே கான்சியஸ் அப்படியே போயிடுச்சு.
ஆனாலும் கடைசியா மனைவி குழந்தையை பத்தி நினைத்ததும் கண்முன் அவர்கள் நின்ற உருவமும் மட்டும் ஓரத்தில் அப்படியே இருக்கு.

ஆனால் இது எதுவுமே துக்கமாகவோ கஷ்டமாகவோ பயமாகவோ துளிகூட தெரியவில்லை. ஆனந்தகடலுக்குள் அல்லவா இருக்கிறேன்.

அப்படியே நான் மிதப்பதையும் எங்கோ செல்வதையும் உணர்கிறேன். அப்படியே ஒரு வெளிச்சமான வெளிச்சம் ஆனால் கண்ணை கூசாத ரம்மியமான இடத்தை பார்க்கிறேன். மிகப்பரந்தவெளி. இரண்டு அல்லது மூண்று அடி உயரத்தில் கண்ணுக்கு குளுமையான தூய வெண்மையில் அசையாத ஒரே அளவில் ஏதோ ஒண்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணிலடங்காமல் இருக்கிறது.

அதை பார்க்கிறேன். மனதில் அப்படி ஒரு சலனமே இல்லாத அமைதி. மெதுவாக அந்த ஒன்றொன்றும் இந்த உலகின் உயிர்கள் என்று புரிகிறது. மீண்டும் அமைதி. எல்லா உயிர்களும் ஒரே அளவு ஒரே உயரம். ஒவ்வொண்றுக்கும் பாகுபாடில்லாமல் எல்லாமே ஒரே அளவு தரப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் யாரோ உணர வைப்பதாக படுகிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.

எல்லோருக்கும் ஒரே அளவு தரப்பட்டிருந்தால் யாருக்கு யார் கொடுப்பது? யாரை யார் காப்பாத்துவது. எல்லாரிடமும் எல்லாமே இருக்கிறது. இதில் கொடுக்க என்ன இருக்கிறது எடுக்க என்ன இருக்கிறது.

இது தோண்றிய அடுத்த கணம் ஓரத்தில் மறையாமல் இருந்த மனைவியும் நிலாவும் மனதில் இருந்து சுத்தமாக மறைந்துவிட்டனர். இப்போ மனதில் பேரமைதி பேரானந்தம்.இனி இந்த உலகத்தில் என்னுடைய கடமை ஒண்றுமே இல்லை.அடுத்தது என்ன மரணம்தானே ஆஹா அதை பார்க்கலாம் எப்படி வருகிறது என்று ஆர்வத்துடன் ஆனந்தத்துடன் உற்று கவனிக்கிறேன். எந்த புள்ளியிலிருந்து வருமென்று. ம்ஹூம் வரவே இல்லை :(. கண்ணை விழித்துபாக்க தோண்றுகிறது. சிரமப்பட்டு முயற்சி செய்ய விழிப்பு வந்தது. முன்புபோலவே மயக்கத்துடன்.

பின்பு சசியை கூப்பிட்டு 5 நிமிடத்துக்கு ஒருதடவை பார்த்து கான்சியஸ் போகாமல் பாத்துக்கோ எனும்போதுதான் பாவம் அவளுக்கு சீரியஸ்னெஸ் புரிந்தது.

ட்ரிப் முடியும்போது ஓரளவுக்கு தெளிவாகிவிட்டேன். ட்ரிப் எடுத்த பின்பு ஹெட்நர்ஸை கூப்பிட்டு(அப்போதும் பேச்சு சரியாக வரவில்லை) இந்த மருந்து இப்படி எஃபெக்ட் கொடுக்குமென்று முன்னாயே சொல்லலாமில்லையா? தண்ணி அடித்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் எனக்கே இப்படின்னா மற்றவர்கள் என்ன ஆவாங்க என்றதுக்கு. நான்கைந்து நர்ஸ்களுமாக "பயந்துட்டீங்களா" என்று கொல்லென்று சிரித்தார்கள்.

மருந்தின் உபயம் மனசுல அப்படி ஒரு அமைதி. இல்லைன்னா அருவாளை தேடி இருப்பேன்.

திரும்பி வீடு வரும்போது எல்லாமே புதுசாக தெரிகிறது. அந்த ஆட்டுகுட்டி எவ்வளவு அழகா துள்ளி குதிக்குது. அந்த மரத்தின் பச்சை என்ன அற்புதம்.


ஒரு பெத்தடின் ஊசியிலோ ஒரு இழுப்பு கஞ்சாவிலோ கூட இப்படி ஒரு அனுபவம் நேரலாமாயிருக்கலாம். இது கூட அட்டு மேட்டராக இருக்கலாம். ஆனால் சாவுவந்துவிட்டது என்று பயமில்லாமல் ஆனத்தத்தோடு அதை எதிர்கொண்டு எல்லோருக்கும் வரும் குடும்ப கவலைக்கும் விடை கண்டு கிட்டதட்ட ஞானம் கிடைக்கப்பெற்ற ரேஞ்சில் ஸ்ஸ்ஸ் அப்பா அற்புதமான அனுபவம்ங்க.

இப்படி வலியில்லாமல் ஆனந்தமாக சலனமில்லாத மனசுடன் அமைதியாக மரணம் வருமெனில் மரனத்தை நேசிக்கிறேன்,


என் மனைவிக்குத்தான் வீட்டுக்கு வந்து விஷயம் முழுசா தெரிஞ்சு... பாவம் புள்ள மூணு மணி நேரம் மூடவுட்

======================================================

அடுத்த நாளும் ட்ரிப் போடவேண்டி இருந்தது. டாக்டரிடம் அனுபவத்தை சொன்னேன். சொல்லிவிட்டு இதற்காகவெல்லாம் அந்த இஞ்செக்சனை மாத்திடாதீங்க. அதையே போடுங்க எண்றதும். உனக்கு இனி அது கிடையாது. ப்ரிஸ்கிரிப்ஷனையும் வாங்கிக்கொண்டு விட்டார். விட்டா அதை நீயே வாங்கி போட்டுக்குவ. உனக்கு நல்லாயிடுச்சு ஓடிப்போயிடுன்னுட்டார்,

ஆக்சுவலா அது அலர்ஜிதான் ஆயிருக்கு.யாருக்கும் அப்படி ஆனதில்லையாம். ஆனால் எனக்கு கம்மியான அலர்ஜி ஆகி இருக்கு.

மெகா போட்டிக்கு, சின்னதா ஒண்ணே ஒண்ணு

சுத்தமா எனக்கு ஒத்து வராத சப்ஜக்ட். பேசாம சைலண்ட்டா இருந்துடலாம்ன்னு பாத்தா இதுக்கு முன்னாடியே பல பேருக்கு போட்டில கலந்துக்கறது பத்தி ஓவர் அட்வைஸ் பண்ணிட்டேன். அவங்கள்ளாம் திருப்பி அட்வைசினா தாங்க மாட்டேன்.ஜீவ்ஸ் வேற மானம், மரியாதைன்னு ஒரு லெக்சர் கொடுத்தார்.

ஓகே கடைசில ஒரே ஒரு படம் மட்டும். இதுவும் பொன்னு வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல. ஒப்பேத்தல்தான்



எனக்கென்னமோ இந்த மாதிரி ஆள் இல்லாத சின்னகோவில்கள்தான் கடவுள்ன கான்செப்ட்டுக்கு பக்கத்துல வர மாதிரி தெரியும். நாமளா போய் கும்பிட்டுட்டு நெத்தில நாமளே திருநீர் அள்ளி அப்பிகிட்டு அக்கடான்னு அரை மணி நேரம் உக்காந்துட்டு வந்தா ஒரு திருப்தி கிடைக்கும்.

கூட்டமான கூட்டம் நெரியும் இடத்துல எப்படி கடவுள்தண்மையை உணர்ராங்கன்னுதான் தெரியல.

சரி அதெல்லாம் அவங்கவங்க நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாத எனக்கெதுக்கு இந்த கவலை.

படத்த பாத்து நாலு திட்டு திட்டனும்னா திட்டிட்டு போங்க. படத்துல பல தப்பு இருக்கு :(

காற்றில் கரைபவர்கள்

ஒரு மனிதன் காற்றில் கரைவது என்பது சினிமாவில் ஸ்டாப்ப்ளாக்கில் மறையும் காமெடி சீன்களில் மட்டுமே சாத்தியம். நிஜத்திலா? எனக்கு தலையை சுற்றியதுடன் அதை என்னிடம் சொன்ன "ரா" உயரதிகாரியின் மனநிலையை சந்தேகப்படவும் வைத்தது.

நேர்மையும் திறமையும் மிக்க அரசாங்க ஊழியர்களில் பொறுக்கி எடுத்த சிலர் வேலையிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளுக்குப் பின் அவ்வப்போது சில வேலைகள் கொடுக்கப்படும்.யார் வேலை கொடுப்பதென்பது தெரியாது. ஆனால் அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். அதில் நானொருவன்.

குடகுமலைப்ரதேசத்தில் பைதுளா எனும் 1000 குடும்பங்கள் வசிக்கும் ஊரில்தான் இந்த வினோதம். மிக நேர்மையான சுதந்திர உணர்வும் வீரமும் மிக்க அமைதியான மக்கள். வேட்டையில் ஆர்வம்மிக்கவர்கள். நமது சட்டங்களை மதிக்காதவர்கள்.ஊர் கட்டுப்பாடு மிக்க அவர்களால் எந்த ஒரு சிக்கலும் வராது.அவர்களுக்கு துப்பாக்கிக்கான உரிமம் மட்டுமல்ல தோட்டாக்களுக்கும் கணக்கு தேவையில்லை. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகை அது. அங்குதான் 15 நாட்களுக்கு ஒரு முறை நடை பெறும் கோயில் பூஜையில் பூஜைக்கு ஒருவர் என்ற முறையில் காணாமல் போக ஆரம்பித்தனர்.

இது "ரா" வரையில் போக காரணம். சுதந்திர உணர்வும் வீரமும் கணக்கு தெரியாத அளவு ஆயுதங்களும் கொண்ட மனிதர்களை யாரேனும் தவறாக வழி நடத்துகிறார்களா என்பதே.

இந்த ப்ரச்சனையை கண்டறிவதுதான் மகா நேர்மையாளன் என்று மற்றவர்களால் இகழப்படும் எனக்கான அசைன்மெண்ட்.

என்னளவில் கடவுளோ அவரால் நிகழ்த்தப்படும் அற்புதங்களோ இவையெல்லாம் ஏமாற்று வேலை அல்லது அறியாமைதான்.
ஆனால் எப்பொழுதும் ஒரு சம்பவத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராயவேண்டும். முதலில் ப்ரொபசர் சாம்பசிவத்திடம் இதைப் பற்றி கூறினேன்.

"ஹாஹா வினோதம்தான். இது வரை தானாக தீப்பிடித்து எரிந்த கேஸ் சில மருத்துவ வரலாற்றில் இருக்கு. காற்றில் மறைந்து போவது என்பது சான்ஸ்லெஸ்" என்றார்.

அடுத்து அவர்கள் மறைந்ததாக நீ சொல்லும் தேதிகள் பவுர்னமிக்கும் அம்மாவாசைக்கும் மிகச்சரியாக இடையில் வரும் அஷ்டமி அன்று. அன்று நிலவின் ஈர்ப்பு விசை நமது பூமி மீது மிகக்குறைவாக இருக்கும். பவுர்னமி அல்லது அம்மாவாசையில் மிக அதிகமாக இருக்கும். அந்த ஈர்ப்புவிசை பொதுவாக ஊர்வனவற்றின் மீது கொஞ்சம் அதிகமாக ஆளுமை செய்யும் இந்த சமயங்களில் அவை molting process எனப்படும் தோலுறிக்கும் நிகழ்வு நடக்கும். கடலலைகளின் சீற்றத்தில் வித்தியாசம் தெரியும் . ஆனால் மனிதனின் மீது நிலவின் ஈர்ப்பு விசையின் தாக்கம் சொற்பமே என்றாலும் மாறுதல்கள் ஏற்படும். அம்மாவாசையில் பைத்தியங்கள் கொஞ்சம் அதிகமாக ரகளை செய்வது போல். இதைதவிர இதில் எதுவும் இல்லை என்றார்

ஓகே ப்ரொபசர், உங்கள் ப்ராக்டிக்கல் அனுபவத்தை அப்படியே தூக்கி வைத்துவிடுங்கள். இந்த சம்பவத்தில் உள்ள சாத்தியமில்லாத சாத்தியங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். என்றேன். என்னை ரசித்து கொஞ்சநேரம் புன்னைகையுடன் பார்த்தவர் "ஓகே மை பாய், நொடிக்கும் குறைவான நேரத்தில் அந்த இடத்தை விட்டு அகலுவது எனில்,
ஒளி வேகத்தைவிட வேகமாக சேல்லும் ஒன்றின் மீது அவர்கள் பயனித்திருக்கலாம். கால இயந்திரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? இது வேண்டுமென்றால் உன் சாத்தியமில்லாத சாத்தியங்களுக்குள் வரலாம். கடவுள் ஒருவனை அப்படியே ஏற்றுக்கொண்டார் எனும் உளரலைவிட கால இயந்திரம் சற்று சாத்தியமே". ம்ஹூம் நான் இப்படி சொல்வதை யாராவது கேட்டால் எனக்கு உடனடி கீழ்பாக்கத்தில் அட்மிசன்தான் என்று சிரித்தார்.

இன்னுமொரு கோணத்தில் இதை விசாரிக்க தோன்றியது. பைதுளா சென்று சேர்ந்தேன். பைதுளாவில் இருந்து 60 கிமீயில் சித்தர்கள் பூமி எனப்படும் பைதுளா மக்கள் வணங்கும் ஒரு இடம் பற்றியும் அங்குள்ள குகையில் இருக்கும் ஒரு சாமியார் பற்றியும் அறிந்து அவரை காணசென்றேன்.

குகை வாசலில் இருந்த அவர் என்னைக்கண்டதும் என் கண்களையே உற்றுப்பார்த்தார். பெரும்ப்ரயத்தனதிற்கிடையில் என் எடை போடும் சந்தேக கண்களை அமைதிப்படுத்தினேன்.சாமியார்கள் முதலில் தங்களிடம் வருபவர்களை கண்களால் யூகித்து அதை வைத்துத்தான் அள்ளி விடுவார்கள். எத்தனை பார்த்திருக்கிறேன்.

சாமியார் ஒரு குறுஞ்சிரிப்பு சிரித்தார்.குறுகுறுப்புடன் பார்த்தார்."உன் எடையில் எத்தனை பங்கு நீரென்று தெரியுமா?மேலும் கீழுமாக தலையசைத்தேன். இந்த குகைக்குள் இருக்கும் காற்றில் எந்த அளவு நீரென்று தெரியுமா? அதற்கும் மேலும் கீழுமாக...இரண்டும் ஒன்றென்றால் காற்றில் மறைவது ஒரு விஷயமா?"

நான் கேட்காமலே எப்படி?ம்ம்ம் யூகித்திருக்க வேண்டும். பக்கத்து ஊர் பிரச்சனையல்லவா? சாமர்த்தியத்தை இங்கே காட்ட கூடாது. நடிடா மகனே நடி. அருகில் சென்று பக்தியுடன் தலை குனிந்து "சாமி அப்போ மறைந்து போகிறவர்கள் எங்கேதான் போறாங்க. எதுக்கு போறாங்க? எப்படி போறாங்க?" என்றேன்.

குனிந்த என் பின்தலையில் கை வைத்து நிமிர்த்தியவர் என் கண்களை உற்றுபார்த்தார்.கிட்டத்தட்ட இரண்டு நிமிடம்.பின்தலையில் இருந்த கை உச்சந்தலைக்கு வந்தது. கனிவாகச் சிரித்தார். அதே வேகத்திள் குகைக்குள் போய்விட்டார்.குகைக்குள் மற்ற மனிதர்கள் போகவே கூடாதென்று முன்னமே எச்சரிக்கப்பட்டிருந்தேன்.
இவனுங்களைப்புடிச்சு முதலில் உள்ளே போடவேண்டுமென்று எரிச்சலுடன் முனகியவாறே பைதுளா திரும்பினேன்.

ஆக நேரடி ஆக்சன்தான் இனி. இதில் அசைன்மெண்ட்டில் சொல்லப்பட்டது ஒரு சின்ன ப்ரச்சனைக்கூட என்னால் வரக்கூடாது என்பது.வெளி ஆட்கள் பைதுளாவில் தங்கக்கூடாது என்பது அவர்களின் விதி.

சிறு வயதில் காணாமல் போன அந்த ஊர் பையனின் பெயரை சொல்லி அது நான்தான் என் நம்பவைத்தேன். சங்கிலி என்பவனை சிநேகமாக்கினேன் .அதன் பின் சமூகத்திற்கான சடங்குகள் எனக்கு செய்யப்பட்டன. பின்கழுத்தில் குத்தப்பட்ட பச்சை உட்பட. ம்ஹூம் இந்த கேஸ் முடிந்ததும் ப்ளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் செய்ய வேண்டி வரும் போல.

அதன்பின் அடுத்த ஒரு மாததில் நான் கண்டுபிடித்தவை.

கோவில் ஊரில் இருந்து ஒரு கிலோமீட்டரில் ஒரு பாறைக்கு அடியில் விசாலமாக குகை குகையாக இருந்தது.அதில் எந்தவித ரகசிய வழிகளும் இல்லை.
அஷ்டமி அன்று நடைபெறும் பூஜையில் பூஜை முடிந்தவுடன் தீப்பந்தங்களை அணைத்து இருட்டில் மிகப்பெரிய முரசு மூன்று தடவை அடிக்கப் படுகிறது. திரும்ப பந்தங்களை பற்ற வைத்துப்பார்கையில் ஒருவன் மாயமாகியிருக்கிறான்.

அந்த பூஜைக்கு முன்பு ஒருவாரத்துக்கு சில பூஜைகள் நடக்கிறது. அதன் பின்பான ப்ரதான பூஜையில் ஐந்து நபர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ப்ரதான பூஜையில் கலந்து கொள்ளுபவர்களில் ஒருவர்தான் மாயமாவது நடக்கிறது. அதிலும் அதன்முன் ஒரு வாரகால பூஜைகளிலும் கலந்து கொண்ட ஆள்தான் மாயமாகிறான்.

அதிலும் மறைந்து போனவர்கள் அனைவருமே மிக நல்ல மனிதர்கள். அதனாலேயே ஊரில் கடவுள் செயலாக அது மதிக்கப்பட்டது.
எங்கே எப்படி மறைகிறார்கள் என்பதில் ஒரு சின்ன உறுத்தலைத்தவிற மற்றவைகளில் ஒரு தெளிவு வந்தாகிவிட்டது.
கோவில் உள்ளே சுத்தபடுத்தும் பொறுப்பினுள் புகுந்ததாலே எல்லா இடங்களிலும் பல சென்சர்கள் பதிக்கப்படுவது எளிதாயிற்று.

அதன் பின் அந்த ஒரு வார பூஜைகளிலும் சங்கிலியுடனே இருந்து அதேசமயம் சங்கிலியை தவிற மற்றவர்கள் ஏதாவது ஒரு பூஜையையாவது தவற விடும்படி செய்தேன் .

இப்போது அடுத்து மாயமாகும் ஆள் சங்கிலி என்பது தெளிவாகிவிட்டது.பூஜையன்று சங்கிலி அறியாதவாறு சங்கிலியின் ஆடைகள்,ஆபரணங்கள் வழியாக சில GPS உபகரணங்கள் சேர்க்கப்பட்டது.இனி சங்கிலி உலகத்தில் எங்கு போனாலும் கண்டுபிடித்துவிட முடியும்.

எனக்கு லேசாக உறுத்திக்கொண்டிருந்த விஷயம் ஒரு மர வளையம். ப்ரதான பூஜையில் மாயமாவதற்கு முன்பு ஒரு வளையம் போண்ற ஒரு மரத்திணுள் நின்றுதான் ஐவரும் வணங்குவர். அந்த மரவளையத்தை ஒரு கால இயந்திரமென்ற அளவுக்கு இல்லையென்றாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மர்மத்தின் மைய புள்ளியாக சந்தேகித்தேன். இந்த தடவை அதையும் விடக்கூடாது.

அனைத்து சடங்குகளிலும் சங்கிலியின் உடனேயே இருந்தேன். கடைசி ப்ரதான பூஜை சங்கிலியை ஒட்டி உரசியவாரே நின்றுகொண்டேன்.

பந்தம் அணைக்கப்பட்டது.

டம்ம்ம்ம்ம்ம்ம்...
மர வளையத்தில் ஒரு கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்.

டம்ம்ம்ம்ம்ம்ம்...
சங்கிலியோடு இன்னும் நன்றாக ஒட்டிக்கொண்டேன்.

டம்ம்ம்ம்ம்ம்ம்





சிரில் அலெக்ஸின் போட்டிக்காக

இரவு நேர படங்கள்.

வந்துட்டோம்ல. அஞ்சு படம் இருக்குங்க. இதுல புளி போட்டு விளக்க ஒண்ணும் இருக்க மாதிரி தெரியல. அப்புறம் எதுக்கு ஜல்லிஅடிக்கனும். எதாச்சும் டவுட்டுன்னா சொல்லுங்க. முதல் படம் போட்டிக்கு

நிலாவுடன் அளாவும் கொடி
செடிகள் தூங்குமா?
பெங்களூர்
Banglor
எங்க வீட்டு நிலா
நிலாவுக்கே மெழுகுவர்த்தி வெளிச்சமா?

வானத்து நிலா
Half moon
குடிசை விளக்கு
Night light

அவ்ளோதாங்க.

ஃப்ளிக்கர் படங்கள் தெரியாதவங்க.எல்லா படத்தையும் பெரியதா பார்க்க வழக்கம் போல இங்கே

நாங்கள்ளாம் பிஸி... இப்படிக்கு பட்டாம்பூச்சி

நம்ம PIT டீம் ஆளுங்க எல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராபில அநியாயத்துக்கு ஆர்வமாயிட்டாங்க. இந்த மாச போட்டித்தலைப்புக்கு கூட அதான் காரணமா இருக்கும்.

ஆனா எனக்கு என்னமோ இந்த மனுசப்பயல படம் எடுக்க புடிக்க மாட்டேங்குது. அதுவுமில்லாம ஸ்ட்ரீட் போட்டோகிராபின்னு போனாலே சந்தோஷமான முகங்களை விட துயரத்தை காட்டும் படங்கள் தான் எடுபடுது.

சிலது எடுத்துப்பாத்தேன் எனக்கு அது ஒத்துவரதா தெரியல.

நான் இதுல நம்ம மோகன்தாஸ் மாதிரி "நம்ம நாட்ட ரிச்சா காட்டமுடிஞ்சா காட்டுங்க,இல்லன்னா படமே எடுக்காதீங்க" ன்னு சொல்ற ஆளு இல்லைதான். இருந்தாலும் துயரம் சோகம் லாம் இல்லாத படம்தான் எனக்கு பிடிக்குது.


அதுக்கு நம்ம புழு பூச்சி செடி கொடிதான் ஒத்துவரும்.

நல்ல வேளை உயிரினங்கள்ன்னும் தலைப்புல கொடுத்துட்டாங்க. மனுசனுக்கு மட்டும்தான் வேலையா?

1.மறுபடியும் பட்டாம்பூச்சிதான் :)

On duty


வாழ்க்கை முழுசும் வேலைதான். எத்தனை பூ தேடனும்? வெயில்லாம் பாக்க முடியாது.தேன் தேடி தினமும் சுத்தலன்னா புவ்வாக்கு லாட்டரிதான். எந்த பறவை எந்த நேரத்துல வேணாலும் புடிச்சு திண்ணுடலாம்.இப்படில்லாம் பாத்தா சோகம்தான்

ஆனா பட்டாம்பூச்சி படத்த பாத்தா நமக்கு சோகமாவா தெரியுது. ஆனா ஒரு மனுசப்பய மூட்டை தூக்கற படத்த பாத்தா மட்டும் ஏன் உச்சு கொட்றோம்?

2. இது போட்டி அறிவிப்புக்கு முன்னாடியே எடுத்தது.

Busy bee

தேனீக்கும் விளக்கம் கொடுத்தா அடிக்க வந்துடுவீங்க. வேலைக்கார தேனீக்கள் மட்டுமே தேன் சேகரிக்கும்ன்னு உங்களுக்கு தெரிந்திருக்கும். தலைப்புக்கு செம மேட்ச் தானே? :P

3. எரும்பு...



இந்த குட்டியூண்டு எரும்பு எதையாச்சும் தூக்கிட்டு போகும்போது எடுத்தா செம மேட்சிங்கா இருக்கும்னு நெனச்சேன். ஆனா படாத பாடு பட்டும் இவ்வளவுதான் கிடைச்சது. கொஞ்சம் பெரிய எறும்புகள புடிச்சிருந்தா தெளிவா வந்திருக்கலாம் ( யோவ் சித்தெரும்பையா எடுக்க ட்ரை பண்ணுன? இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலயா... இது ஜீவ்ஸ் சொன்னது :P )

முடிந்த அளவு புதிதாக எடுக்கும் படத்தையே போட்டிக்கு கொடுக்க நினைப்பதால் முதல் படத்தை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க நீங்களாம்?

Flickr படம் தெரியாத ஊர்காரவுகளுக்கு இங்க